ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நாயுருவியின் மருத்துவ குணங்கள்


நாயுருவி

By M.sachidhanandham
 

வேலுக்கு பல் இருகும்
வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே
ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்".


நாயுருவி (Achyranthes aspera) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.


எதிர் அடுக்குகளில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி இனமாகும். இது இரண்டு அடி வரை வளரக் கூடியது. இதன் தண்டு, காம்பு செந்நிறம் உடையதாக இருக்கும். இதன் எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் உடையவை. சிறுநீர் பெருக்கவும், நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தவும், சதை, நரம்புகளைச் சுருங்கவும் செய்யும் மருத்துவக் குணம் உண்டு. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் தானாகவே வளர்கின்றது.

தெருவோரங்களில் தானே வளர்ந்து காணப்படும் நாயுருவிச்செடி ஹோமத்தில் எரிக்கவும் பயன்படும் தெய்வீக மூலிகை. 

 ஹோம் வளர்க்கும் ஒன்பது வகை விறகுக் குச்சிகள், அவை : (1) முருக்கு, (2) கருங்காலி, (3) நாயுருவி, (4) அரசு, (5) அத்தி, (6) மா, (7) வன்னி, (8) ஆல், (9) இத்தி என்பன.
                                                   
இதில் இருந்து நாயுருவி வேத காலத்தில் இருந்து மனித பயன் பாட்டில் இருந்து வந்தது தெரிகிறது.

Common name: Prickly Chaff Flower, Chaff-flower, Crocus stuff, Crokars staff, Devil's horsewhip • Hindi: चिरचिटा Chirchita, लटजीरा Latjira • Manipuri: খুজুম্পেৰে Khujumpere • Sanskrit: अपामार्ग Apamarga
Botanical name: Achyranthes aspera    Family: Amaranthaceae (Amaranth family)


வேறு பெயர்கள்: அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி.
 
செந்நாயுருவி என்னும் இந்தவகையின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும். மருத்துவக் குணம் பெரும்பாலும் இதற்கு அதிகமாகவே காணப்படுகின்றது. ஆங்கிலத்தில் இதை Achyranthes aspera, Amarantaceze

மலச்சிக்கல், பசியின்மை, செரிக்காமை (அசீரணம், அறாமை) போன்றவற்றுக்கு மருந்தாகிறது
பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், மூலம், இருமல், தோல் அரிப்பு, உடற் சுறுசுறுப்புக் குறைதல், தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
தேள் கடியினாற் பாதிக்கப்பட்டோரைக் குணமாக்க நாயுருவியின் இலைச் சாறு பயன்படுகிறது.

காதுவலி, பல்வலி, சிறுநீரடைப்பு போன்றவற்றுக்கான மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.

பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி என்னும் அற்புத மூலிகை ஆகும்.

நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். நாயுருவி பற்பொடியும் தயாரித்துக்கொள்ளலாம்.

நாயுருவிச்செடியினால் பல் துலக்கமுக வசீகரம் பெறும். நாயுருவி பற்பொடி செய்யவும் பயன் படுகிறது .இதில் பலபோடி செய்து வியாபாரம் செய்யலாம் .சிறந்த வாய்ப்பு உள்ளது .பல் துலக்கதவர்கள் யார் ? எனவே உபயோகிப்போர் அதிகம் .பொருள் மிகுந்தோர் நாயுருவி டூத் பேஸ்ட் செய்து உலக சந்தையை குறிவைக்கலாம் .  வளமான தமிழன் தான் வலிமையான தமிழன் .

பல் போடி செய்யும் முறை
நாயுருவி வேர் - 100 கிராம்
கடுக்காய் - 50 கிராம்
நெல்லிக்காய் - 50 கிராம் 
தான்றிக்காய் - 50 கிராம்
ஏல அரிசி - 20 கிராம்
கிராம்பு - 50 கிராம்
சுக்கு - 50கிராம்
கருவேலப்பட்டை - 50கிராம்
இந்துப்பு - 50 கிராம்

உலர வைத்து தூசி, கொட்டை நீக்கி பொடி செய்து மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். இதைக்கொண்டு தினமும் இரு முறை பல் துலக்கி வர பல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் பற்கள் பளபளவென மின்னும்.
இன்னொரு விந்தையான குணம் நாயுருவிக்கு உண்டு .இதை சித்தர்கள் ரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்தனர் .

நாயுருவி  கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது .எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ,உணவுக்காக நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனிதர் கண்ணில் படாமல் இருக்க இயலும் .

நாயுருவி இலைகளில்  அதி காலையில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.

நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும்.

நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.

நாயுருவி இலையோடு குப்பை மேனி இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிபட்ட வாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும்.

நாயுருவி வேர்ப்பட்டை, மிளகு சம அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். நாயுருவி விதையை 10 கிராம் எடுத்து அரைத்து 2 வேளை 2 நாட்கள் சாப்பிட்டு வர பேதி நிற்கும்.

நாயுருவி விதையை நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 20 கிராம் எடுத்து, துத்திக் கீரையை வதக்கும் போது சேர்த்து உணவுடன் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூலமும் குணமாகும். நாயுருவி விதையைச் சோறு போல சமைத்து உண்ண பசி எடுக்காது. ஒரு வாரம் ஆயாசம் இல்லாமல் இருக்கலாம். பின்னர் மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்க பசி உண்டாகும்.

நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கப் பல் தூய்மையாகி முகம் வசீகரம் ஆகும். நாயுருவி சமூலமும், வாழைச் சருகும், மூங்கில் குருத்தும் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு 400 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 200 மில்லியளவு 2 வேளை குடிக்க, பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும்.

நவ கிரகத்தில் நாயுருவி புதன் கிரகத்தை குறிக்கும்   புதன் கிரகத்திற்குக் கோவில் ஒன்று அமைத்து பகவானுடன், ஞானாதேவி, நாயுருவி செடி, இம்மூன்றையும் ஒரே சமயத்தில் வணங்குகின்றார்கள். இதனால் இக்கிரகத்தின் நன்மைகள் கிடைக்கும் என்றும், உயிரைக் குடிக்கும் நோய்களான கிட்னி ஃபெயிலியர், எய்ட்ஸ் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் நம்புகின்றனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகில் உள்ள விநாயகபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் புதன் பகவானுடன், ஞானாதேவி அம்மன் மற்றும் நாயுருவி செடியைச் சேர்த்து ஒரே சமயத்தில் காலை, மாலை இரண்டு வேளைகள் பூஜை செய்யப்படுகின்றன. புதன் பகவான் கோவில் இங்கு தனியாக அமைந்திருக்கிறது.

விதையை  சாப்பிட்டால் ஒரு வாரம்வரை பசி இருக்காது. மீண்டும் பசி எடுக்க, சிறிதளவு மிளகு எடுத்து அதை வறுத்து இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.

 20 கிராம் விதையை பவுடராக்கி துத்திக் கீரையில் கொதிக்க வைத்து காலை உணவில் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூலம் குணம் பெறும்.

10 கிராம் விதையை அரைத்து இரண்டு வேளை சாப்பிட்டால் பேதி குணம் பெறும். சிவப்பு, வெள்ளை நிறம் இரண்டு வகை நாயுருவி இருக்கின்றன. இரண்டும் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates